முல்லைத்தீவு, இரணைப்பாலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு மேற்கொள்ளப்பட்டபோதிலும் அங்கு ஆயுதங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இரணைப்பாலை சென். அன்ரனிஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் கடந்த இரண்டு நாட்களாக அகழ்வுப் பணிகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த அந்த பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளன என்று புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்ததாக கூறி, நீதிமன்ற உத்தரவு பெற்று இந்த அகழவுப் பணிகள் நடைபெற்றன.
கிராம அலுவலர், முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் மன்றப் பதிவாளர், படை அதிகாரிகள், காவல்துறையினர் முன்னிலையில் இந்த அகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
நேற்று சுமார் ஒன்றரை மணி நேரம் அகழ்வுப் பணிகள் நடைபெற்ற போதிலும், ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், அகழ்வுப் பணிகள் பிற்பகல் ஒரு மணியுடன் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டன.
இதேவேளை கிளிநொச்சியின் இரு வேறு பகுதிகளில் இன்றும் நேற்றும் தமிழீழ விடுதலை புலிகளின் புதையல் தேடும் பணிகள் இடம்பெற்றுள்ளன.
கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றின் அனுமதியுடன் காவல்துறையினரின் கண்காணிப்பில் குறித்த அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
கிளிநொச்சி கனகாம்பிகைகுளம் பகுதியில் கடந்த 26ஆம் நாள் அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையில், அப்பகுதியில் உறுதியாக தங்கம் காணப்படுகின்றது என்று தெரிவித்து மீண்டும் நேற்று அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இரவு 9 மணிவரை அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் எவ்வித சான்றுகளும் கிடைக்காத நிலையில், நிலையில் குறித்த அகழ்வு பணியின்போது ஆமை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டு அருகில் காணப்பட்ட நீர் ஓடையில் விடப்பட்டது.
இதேவேளை இன்று கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் விடுதலை புலிகளின் முகாம் ஒன்று அமைந்திருந்த பகுதியில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
குறித்த அகழ்வு பணியின்புாது எவ்வித பொருட்களும் மீட்கப்படாத நிலையில் அந்த நடவடிக்கையும் கைவிடப்பட்டுள்ளது.