சவுதி அரேபியா எண்ணெய் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தி உள்ளார்.
ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நவம்பர் மாதம் 4ஆம் நாளுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அனைத்துலக நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் வலியுறுத்தி உள்ளார்.
உலக அளவில் பிரதான எண்ணெய் உற்பத்தியாளராக விளங்கி வரும் ஈரானுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் முயற்சியாக இந்த அறிவிப்பு விடுக்க்பபட்டுள்ள நிலையில்,கடந்த வாரம் அனைத்துலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.
இதனை அடுத்து கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு சவுதி அரேபியா எண்ணெய் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பில் சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அசிசை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ள அமெரிக்க அதிபர், அனைத்துலக எண்ணெய் சந்தையில் நிலைத்தன்மையை பாதுகாப்பதற்கு சவுதி அரேபியா, நாள் ஒன்றுக்கு 20 இலட்சம் பீப்பாய்கள் வரை எண்ணெய்யை உற்பத்தி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
அதனை மன்னர் சல்மான் பின் அப்துல் அசிஸ் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், தேவைப்பட்டால் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க தயாராக இருப்பதாகவும் உறுதி அளித்துள்ளார் என்றும் தனது கீச்சகப் பதில் அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.