கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த மாதம் மாத்திரம் 35 டெங்கு நோயாளர்கள் இருக்கலாம் எனவும், சந்தேகத்தின் பெயரில் 35 பேரின் இரத்த மாதிரிகள் பாிசேதனைக்கு அனுப்பட்டுள்ளதாகவும் மாவட்ட சுகாதார பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மற்றும் ஆவணி மாதங்களில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பது வழமை எனவும், ஆனால் இந்த ஆண்டில் ஆனி மாதத்திலேயே இதுவரை 35 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ள நிலையில், இது வழமைக்கு மாறானது என்றும் சுகாதார திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு முன்னைய ஆண்டுகளில் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப்பிரிவின் இணையத்தளத்திலுள்ள தரவுகளின் படி ஆனி மாதங்களில் ஆகக் கூடியது 21 டெங்கு நோயாளர்களே இனங்காணப்பட்டிருந்தனர் எனவம், அத்துடன் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மொத்தம் 170 டெங்கு நோயாளிகள் கிளிநொச்சியில் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை வவுனியாவில் சில பகுதிகளில் டெங்கு அதிகரித்துக் காணப்படுவதாகவும், 18 பேருக்கு டெங்கு தொற்று ஏற்பட்டுள்ளமை பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் வவுனியா மேற்பார்வை பொது சுகாதாரப்பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரத்தில் கற்குழி, தேக்கவத்தை, வெளிவட்ட வீதி போன்ற பகுதிகளில் பெருமளவான டெங்கு நுளம்புகள் பெருக்கெடுப்பது பரிசோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளதாகவும், டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை கண்டறிந்து, அதனை தடுக்கும் நடவடிக்கையில் சுகாதாரப் பரிசோதகர்கள் 8 பேரடங்கிய குழுவினர், பொது அமைப்புக்கள், கிராம மக்களுடன் இணைந்து வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.