ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகினாலும், இலங்கையின் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பான அனைத்துலக ஈடுபாடு மாற்றமடையாது என்று இலங்கைக்கான ஐ.நாவின் புதிய வதிவிடப் பிரதிநிதி ரெரன்ஸ் டி ஜோன்ஸ் உறுதியளித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்துப் பேச்சு நடத்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகியுள்ள சூழல் குறித்து, இந்தச் சந்திப்பின் போது ஆராயப்பட்ட போது கருத்து வெளியிட்ட ஐ.நா பிரதிநிதி ரெரன்ஸ் டி ஜோன்ஸ், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகியிருந்தாலும், 2015 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அமுலாக்கம் தொடர்பாக, இலங்கை அரசாங்கத்தின் மீதான அனைத்துலக ஈடுபாடு தொடர்ந்தும் மாற்றமடையாமல் இருக்கும் என்று கூறியுள்ளார்.
இரா.சம்பந்தனுடன் இணைந்து கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் பங்கேற்ற இந்த கலந்துரையாடல் ஏறக்குறைய ஒரு மணி நேரம் நீடித்தமை குறிப்பிடத்தக்கது.