கொழும்பு மாநகர சபையின் சுயேட்சைக் குழு உறுப்பினரான கிருஸ்ணா எனப்படும், 40 வயதான கிருஸ்ணபிள்ளை கிருபானந்தன் இன்று காலை கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
செட்டியார் தெருவில் இன்று காலை 7.45 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தனது பழக்கடையில் நின்ற போது, உந்துருளிவில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் மாநகர சபை உறுப்பினர் கிருஸ்ணா மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், படுகாயமடைந்த அவர் உடனடியாக கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொட்டாஞ்சேனையை வதிவிடமாகக் கொண்ட கிருஸ்ணபிள்ளை கிருபானந்தன், நவோதய மக்கள் முன்னணியின் தலைவராக உள்ளார் என்பதுடன், கடந்த பெப்ரவரி மாதம் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில், சுயேட்சைக் குழுவில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நவோதயம் மக்கள் முன்னணியின் தலைவராக செயற்பட்டு வந்த கொழும்பு மாநகர சபை உறுப்பினரான கிருஷ்ணப்பிள்ளை கிருபாணந்தன், .காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்காக, அண்மைக்காலமாக போராடிவந்தவர் என்பதுடன், குறிப்பாக இவர் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் விடுதலைக்காக குரல் கொடுத்து வந்ததுடன், ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளுக்கும் உதவிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.
அத்துடன் இறுதி போரின் போதும், போரின் பின்னரும் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளுக்கு உதவி செய்யும் வகையில், காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து விபரங்களை திரட்டும் பணியில் அண்மைக்காலமாக ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை கொழும்பு- கொட்டாஞ்சேனை, ஜெம்பட்டா வீதியில் நேற்று முன்னிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டதுடன், இருவர் காயமடைந்துள்ளனர்.
58 வயதான செல்லையா செல்வராஜ் மற்றும் 50 வயதான எலிசபெத் பெரேரா ஆகியோரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.