ஒன்ராறியாவில் அமைந்துள்ள பாடசாலைகளில் இந்த ஆண்டில் மேற்கொள்ள வேண்டிய திருத்த வேலைகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நூறு மில்லியன் டொலர்கள் நிதியினை, டக் ஃபோர்ட் தலைமையிலான முற்போக்கு பழமைவாதக் கடசியின் புதிய மாநில அரசாங்கம் நிறுத்தியுள்ளது.
கடந்த 3ஆம் நாள் இது குறித்த அறிவுறுத்தல் கடிதங்களை பாடசாலைகள் சபைகளுக்கு அனுப்பி வைத்துளள மாநில அரசாங்கம், அதற்கு முன்னர் செய்யப்பட்ட வேலை ஒப்பந்தங்களுக்கான கொடுப்பனவுகள் மட்டும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்த நூறு மில்லியன் நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த நிதி அறிவிப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் திருத்த வேலைகள் அனைத்தையும் உடனடியாக நிறுத்துமாறு குறித்த அந்த கடிதம் மூலம் பாடசாலை சபைகளுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இதற்கு முன்னர் செய்துகொள்ளப்பட்ட வேலை ஒப்பந்தங்கள் மற்றும் செலவீனங்கள் தொடர்பிலான தெளிவான விபரங்களுடன் கூடிய ஆவணங்களை தயார்படுத்தி வைத்துக் கொள்ளுமாறும். கல்வித் திணைக்கள அதிகாரிகள் அவற்றை விரைவில் பெற்றுக் கொள்வார்கள் என்றும் அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஒன்ராறியோ புதிய அரசின் இந்த அறிவித்தல் குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள ரொரன்ரொ மாவட்ட பாடசாலைகள் சபை, இந்த நடவடிக்கையால் தாம் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும், இன்னமும் ஏறக்குறைய 4 மிலலியன் டொலர்கள் பெறுமதியான திருத்த வேலைகள் முடிக்கப்பட வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த நிதி ஆண்டினுள் 300 மில்லியன் டொலர்கள் பெறுமதியான திருத்த வேலைகளை செய்வதற்கு ரொரன்ரோ மாவட்ட பாடசாலைகள் சபை திட்டமிட்டிருந்ததாகவும், அவற்றுளள் குறித்த இந்த நிதி ஒதுக்கீடு மூலம் 25 மில்லியன் டொலர்கள் பெறுமதியான திருத்த வேலைகள் மேற்கொள்ளப்படவிருந்ததாகவும், தற்போது அந்த நிதி நிறுத்தப்படுவதனால் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்க நேர்வதாகவும் ரொரன்ரோ பாடசாலைகள் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.