போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நடைமுறைபடுத்துவதற்கு இலங்கை அமைச்சரவையின் அங்கிகாரம் கிடைத்துள்ள நிலையில், மரணதண்டனையை நிறைவேற்றுபவர் பதவிக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
மரணதண்டனையை நிறைவேற்றுபவர் தொடர்பில் இரண்டு பதவி வெற்றிடங்கள் காணப்படுவதாக இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து இந்த பதவி வெற்றிடமாகவே காணப்படுவதாகவும், இருவர் இந்தப் பதவிகளுக்காக இணைத்துக்கொள்ளப்பட்டபோதிலும் அவர்கள் பயிற்சியின் பின்னர் பதவி விலகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தூக்கிலிடுவதற்கு பயன்படுத்தப்படும் கயிறு மற்றும் உபகரணங்கள் ஏற்கனவே சிறைச்சாலைகள் திணைக்களத்தில் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் போதைப்பொருளுடன் தொடர்புடைய 13 மரணதண்டனை குற்றவாளிகள் காணப்படுவதோடு, அவர்களில் ஒரு பெண்ணும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.