கடந்த 24 மணி நேரத்தினுள் பிரிட்டிஷ் கொலம்பியாவில் புதிதாக 11 காட்டுத்தீப் பரவல்கள் ஏற்பட்டுள்ளன.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் தென் பாதிப் பிராந்தியங்களில் தற்போது நிலவிவரும் மிக அதிகமான வெப்ப அலையும், பலத்த காற்றும் இவ்வாறான காட்டுத்தீப் பரவல்களைத் தீவிரப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
நேற்று ஏற்பட்டுள்ள இந்த 11 காட்டுத்தீச் சம்பவங்களில் ஆறு மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டது எனவும், ஒன்று மின்னல் காரணமாக ஏற்பட்டுள்ளதாகவும், ஏனைய நான்கு சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பிரிட்டிஷ் கொலம்பிய காட்டுத்தீ முகாமைத்துவ திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்வரும் நீண்ட நாட்களுக்கு மழையோ, குளிரான வானிலையோ ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படவில்லை என்பதனால், இவ்வாறான காட்டுத்தீப் பரவல்கள் குறைவடையும் என்று எதிர்பார்க்க முடியாதுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில் தற்போது பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணம் தழுவிய அளவில் ஏறக்குறைய 60 இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து எரிந்து வருவதாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் பொதுவாக ஏப்ரல் மாதம் முதலாம் நாளில் இருந்து, செப்டம்பர் இறுதிப் பகுதி வரை காட்டுத்தீப் பரவல்கள் காணப்படும் என்ற நிலையில், தற்போது காட்டுத்தீயின் மத்திய காலப்பகுதியை பிரிட்டிஷ் கொலம்பியா எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கம்லூப்ஸ்(Kamloops) பகுதியில் கடந்த வியாழக்கிழமையில் இருந்து பாரிய நிலப்பரப்பை மூடிப் பரவிவரும் காட்டுத்தீயினைக் கட்டுப்படுத்த தீயணைப்பு படையினர் பலத்த முயற்சிகளில் தொடரந்து ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.