இறுதி போர்க் காலப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்த நிலையில் காணாமல் போனோருக்கு என்னானது என்பது குறித்து ஆராய்வதற்கு முன்னுரிமை வழங்குவதற்கு திட்டமிட்டு்ளளதாக காணாமல் போனோர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
காணாமல் போனோர் அலுவலகத்தின் மக்கள் கருத்தறியும் அமர்வு இன்று கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்ற நிலையில், இதில் காணாமல் போனோர் அலுவலகத்தின் ஆணையாளர் சனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஷ் உள்ளிட்ட ஆணையாளர்கள் மற்றும் அலுவலர்களும், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கிராம அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இன்றைய நாள் காணாமல் போனோரது உறவினர்களுள் 12 பேர் தங்களது கருத்துக்களை பகிர்ந்துக் கொண்ட நிலையில், இதன்பின்னர் ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய காணாமல் போனோர் அலுவலகத்தின் ஆணையாளர் சாலிய பீரிஷ், வடமாகாணத்திலேயே அதிகளவானர்கள் காணாமல் போயுள்ள நிலையில், அது மிகப்பெரிய பிரச்சினையாக காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இறுதி போரின் போது படையினரிடம் கையளித்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் முன்னுரிமை வழங்கி விசாரணை நடத்தவும், அவர்களுக்கு என்ன ஆனது என்பதை அறிந்து கொள்ளவும் நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இன்றும் காணாமல் போனோர் அலுவலகத்தின் கருத்தறியும் மண்டபத்துக்கு வெளியில் அந்த அலுவலகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது அலுவலகத்தின் ஆணையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய மக்களிடம் சென்று, அவர்களது கருத்துக்களை பதிவு செய்யுமாறு கோரிய போதிலும், மக்கள் அந்த கோரிக்கை புறக்கணித்து தொடர்ந்தும் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.