2014ஆம் ஆண்டு போருக்கு பிறகு, காஸாவில் ஹமாஸ் தீவிரவாத குழுவுக்கு சொந்தமான இடங்கள் மீது இஸ்ரேல் மிகப்பெரிய தாக்குதலை தொடுத்துள்ளது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மீது எறிகணை ஏவி தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி என தெரிவித்த அவர் தேவைப்பட்டால் மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
பாதுகாப்புத் துறை அமைச்சர், தலைமை அதிகாரி, நாட்டின் முதன்மை பாதுகாப்பு அதிகாரி, ஆகியோருடன் கலந்து ஆலோசித்ததில் ஹமாஸ் பயங்கரவாதம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட 90க்கும் மேற்பட்ட எறிகணைகளில் ஒன்று தாக்கியதில் இஸ்ரேலை சேர்ந்த மூன்று பேர் காயமடைந்துள்ளனர் என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்தள்ளது.
அதேவேளை காஸா நகரில் சனிக்கிழமை மேற்கொள்ள்பபட்ட வான் தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர் மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் பாலத்தீனிய சுகாதார அதிகாரிகள் விபரம் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஒப்புகொள்ளப்பட்டதாகவும், எகிப்து மற்றும் அனைத்துலக நாடுகளின் முயற்சிகளுக்கு நன்றி என்றும் பாலத்தீனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் பாலத்தீனிய அதிகாரிகளின் இந்த அறிக்கை குறித்து எந்தவித பதில் கருத்தையும் இஸ்ரேல் தெரிவிக்கவில்லை.