இன்று அதிகாலை வேளையில் நோர்த் யோர்க் பகுதியில், நெடுஞ்சாலை 401இல் இடம்பெற்ற கோர விபத்தில் 3 சிறுவர்கள் உள்ளிட்ட 5 பேர் படுகாயடைந்துள்ளனர்.
மூன்று வாகனங்கள் தொடர்பு பட்டுள்ள இந்த விபத்து, நெடுஞ்சாலையின் கிழக்கு நோக்கிய வழித்தடத்தில், Leslie Street பகுதியில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் சம்பவித்துள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும், சுமார் 60 வயது மதிக்கத்தக்க மற்றுமொரு பெண்ணும் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதனை அவசர மருத்துவப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அத்துட்ன இந்த விபத்தின் போது மூன்று சிறுவர்கள் படுகாயமடைந்ததாகவும், அதில் ஒருவர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாரதூரமான காயங்களுக்கு உள்ளான அந்த குழந்தை இரண்டு வயதுக்கும் குறைவானது என்று நம்பப்படுவதாகவும் அவசர மருத்துவப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தினை அடுத்து அந்த பகுதி ஊடான போக்குவரத்துகள் அனைத்தும் தடை செய்யப்பட்டிருந்த போதிலும், இன்று காலை ஆறு மணியளவில் அவை மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளன.
விபத்துக்கான காரணம் இன்னமும் கண்டறியப்படாத நிலையில், அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.