இந்திய இராணுவம் வடக்கு கிழக்கில் நிலைகொண்டிருந்த காலப் பகுதியில், இந்திய இராணுவத்தினரால் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான முறைப்பாடு கிடைத்தால், அது தொடர்பில் இந்திய இராணுவத்தையும் விசாரிப்போம் என்று காணாமல் ஆக்கப்பட்டோர் பணியகத்தின் ஆணையாளர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை, காணாமல் ஆக்கப்பட்டோர் பணியகத்தினர் நேற்றுச் சந்தித்த நிலையில், இதன் பின்னர் செய்தியாளர்களையும் அவர்கள் சந்தித்தபோது எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்திய இராணுவம் வடக்கு – கிழக்கு தாயகத்தில் நிலை கொண்டிருந்தபோது பலர் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள் எனவும், அது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டால், இந்திய இராணுவத்தின் மீதும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த காணாமல் ஆக்கப்பட்டோர் பணியகத்தின் ஆணையாளர் சாலிய பீரிஸ், முறைப்பாடு கிடைத்தால் தாம் இந்திய இராணுவத்தையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என்று கூறியுள்ளார்.