அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுக்கும் இடையிலான உச்ச நிலைச் சந்திப்பு இன்று திங்கட்கிழமை பின்லாந்து தலை நகர் ஹெல்சின்கியில் (Helsinki) நடைபெறுகின்றது.
இந்த சந்திப்பின் போது முதலில் இரண்டு தலைவர்களும் தனிப்பட்ட முறையிலும், பின்னர் தங்கள் நாட்டு பிரதிநிதிகளுடன் இணைந்தும் பேச்சுக்களை முன்னெடுக்கின்றனர்.
அதேவேளை இந்த பேச்சுக்களின் முன்னராக கருத்துத் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அணுவாயுதக் கட்டுப்பாடு, உக்ரேன், சிரியா போன்ற முக்கிய உலக விவகாரங்கள் குறித்துத் தாம் பேசவிருப்பதாக கூறியுள்ளார்.
அத்துடன் 2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு குறித்து பேசவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்ற வெள்ளிக்கிழமை, சனநாயகக் கட்சி வேட்பாளர் ஹில்லாரி கிளிண்டனின் தகவல் கட்டமைப்பை ஊடுருவியதாக ரஷ்யப் புலனாய்வு அதிகாரிகள் 12 பேர் மீது அமெரிக்கா குற்றஞ்சாட்டியது.
அத்துடன் அமெரிக்க அதிபர் ரஷ்ய அதிபருடனான உச்சநிலைச் சந்திப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்று சஜனநாயகக் கட்சியினர் வலியுறுத்தியுள்ள போதிலும், இன்று இந்த பேச்சுக்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.