பிரித்தானியா அதன் விசா கட்டுப்பாடுகளை தளர்த்தி பிரித்தானியா வரும் இந்திய மாணவர்களுக்கு விசா நடைமுறையை எளிதாக்க வேண்டும் என்று இலண்டன் நகரபிதா சாதிக் கான் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் பிரிட்டன் உள்துறை அமைச்சர் சஜித் ஜாவீத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், விசா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் நாடுகள் பட்டியலில் இந்தியாவை இணைத்திட வேண்டும் என்ற கோரிக்கையும் அவர் விடுத்துள்ளார்.
பிரித்தானியாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் சேர விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும், பிரித்தானியாவின் நட்பு நாடுகள் பட்டியலில் உள்ள பல நாடுகளை சேர்ந்த மாணவர்களுக்கு அதிலிருந்து விலக்கு அளிக்க்பபட்டுள்ளது.
அத்துடன் பிரித்தானிய அரசு அண்மையில் வெளியிட்டுள்ள நட்புநாடுகளின் பட்டியலில் சீனா, கம்போடியா, இந்தோனேசியா, தாய்லாந்து, மெக்சிகோ, பக்ரைன், செர்பியா, டொமினிகன் குடியரசு, குவைத், மாலத்தீவு, மெக்காவ் ஆகிய நாடுகளை புதிதாக இணைத்துள்ள போதிலும், இந்தியா இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.