காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகளை மீட்பதற்காக தொடர்போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் முல்லைத்தீவு மக்கள், எந்த தீர்வுகளுமின்றி இன்றும் 496வது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த ஆண்டு பங்குனி மாதம் 8ம் நாள் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கூடாரமமைத்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
இந்த நிலையில் இன்று ஊடக சந்திப்பு ஒன்றினை நடாத்தியுள்ள அவர்கள், தங்களின் போராட்டம் நாளை மறுதினம் 500வது நாளை எட்டுகின்றது எனவும், எனினும் இதுவரை தமக்கான எந்த தீர்வும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
இலங்கை அரசு தமக்கு பதில் வழங்காதிருக்கின்றது என்றும், இதனாலேயே தாம் ஐ.நா அமர்வில் சென்றும் தமது நிலைப்பாட்டை கூறி அனைத்துலக விசாரணையே தேவை என்று கோரியதாகவும் அவர்கள் விபரித்துள்ளார்.
காணாமல் போனோர் அலுவலகம் தமக்கு எதையும் செய்யாது எனவும், இறுதியாக தமது 500வது நாளில் பலமான கோரிக்கையாக தமது கோரிக்கையை எடுத்து கூறவே தாம் ஒன்று கூடியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் மதத்தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பும் தம்மோடு சேர்ந்து பலமான குரலாக எமது உறவுகளை மீட்க அனைவரும் ஒன்றுதிரண்டு, தம்மோடு குரல்கொடுக்குமாறு பகிரங்க அழைப்பு விடுப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை தென்னிலங்கையினை சேர்ந்த கிறிஸ்தவ மதகுருமார்கள் மற்றும் அருட்சகோதரிகள் அடங்கிய குழு ஒன்று இன்று முல்லைத்தீவு மாவட்டத்துக்கு பயணம் மேற்கொண்டு போராட்டம் நடைபெறும் இடங்களுக்கு சென்று பார்வையிட்டுள்ளார்கள்.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்தித்து அவரகளுடன் கலந்துரையாடிய மதகுருமார்கள், கேப்பாபுலவு பகுதியில் நிலமீட்பு போராட்டம் மேற்கொண்டுவரும் மக்களின் போராட்ட இடத்திற்கு சென்று அவர்களின் போராட்டம் தொடர்பிலும் அவர்களின் நியாயமான கோரிக்கை தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டுள்ளனர்.