இஸ்ரேலை யூத தேசம் என்று அறிவிக்கும் சர்ச்சைக்குரிய சட்டமூலம் ஒன்றை இஸ்ரேல் நாட்டு நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ இந்த சட்மமூலத்தினை வரவேற்று உள்ளதுடன், இதனை முக்கியமான தருணம் என்று போற்றியுள்ளார்.
ஆனால் இஸ்ரேலின் அரேபிய நாடாளுமன்ற உறுப்பினர் இந்த சட்டமூலத்தினைக் கண்டித்துள்ளதுடன், இந்த சட்டமூலம் சனநாயகத்தின் மரணம் என்றும் வர்ணித்த்ளளார். இஸ்ரேலின் மக்கள் தொகையில் ஏறத்தாழ 20 சதவீதம் அதாவது 9 மில்லியன் பேர் பேர் அரேபியர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டப்படி அவர்களுக்கு சம உரிமை இருந்தாலும், இரண்டாம் தர குடிமக்களாக தாங்கள் நடத்தப்படுவதாகவும், இன பாகுபாடுகளை தாங்கள் எதிர்க்கொள்வதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இஸ்ரேலில் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக அரபி இருந்து வருகிற நிலையில், இந்த சட்டமூலமானது இந்த தகுதியினை இழக்க வழிவகை செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த சட்டமூலமானது ‘முழுமையான மற்றும் ஒற்றுமையான’ ஜெருசலேம்தான் இஸ்ரேலின் தலைநகரம் என்று கூறுவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
வரலாற்று ரீதியாக இஸ்ரேல் யூதர்களின் தாயக பூமி என்றும், சுயநிர்ணயத்திற்கு அவர்களுக்கென சில பிரத்யேக உரிமைகள் இருக்கின்ற என்றும் கூறியுள்ளது.
நாடாளுமன்றில் எட்டு மணிநேரம் நடந்த விவாதத்திற்கு பின்னர், குறித்த தீர்மானதத்திற்கு எதிராக 55 உறுப்பினர்களும், ஆதரவாக 62 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்திருந்த நிலையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், இந்த தீர்மானத்தில் உள்ள சில உட்பிரிவுகளுக்கு இஸ்ரேலிய அதிபர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அந்த உட்பிரிவுகள் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.