ஈரானுடனான உறவில் மூன்றாம் நாடுகளின் தலையீட்டை ஏற்க மாட்டோம் என்று இந்தியா தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றதன் பின்னர், 2015ஆம் ஆண்டில் ஈரானுடன் செய்துகொண்ட அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய 6 வல்லரசு நாடுகளுக்கும் செய்துகொண்ட அணு சக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த மே மாதம் குறித்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக அமெரிக்க அதிபர் அறிவித்ததுடன், ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
அத்துடன் இந்தியா உள்ளிட்ட அமெரிக்க நட்பு நாடுகள் ஈரானிடம் , வரும் நவம்பர் மாதம் முதல் கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்றும், மீறும் நாடுகளின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் எனவும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில் ஈரானுடனான இந்தியாவின் உறவு குறித்து மாநிலங்களவையில் இன்று விளக்கமளித்த மத்திய வெளியுறவு இணை அமைச்சர் வி.கே.சிங், ஈரானுடனான உறவு குறித்து இந்தியா சுயமாக முடிவு செய்யும் என்றும், அதில் மூன்றாம் நாடுகளின் தலையீட்டை ஏற்காது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் தமது நாட்டின் நலன்களைக் காக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசு எடுக்கும் என்றும், ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதால் நேரிடும் பாதிப்புகள் உள்ளிட்டவற்றை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது என்றும் அவர் விளக்கமளித்து்ளளார்.
இந்தியா கச்சா எண்னெய் இறக்குமதி செய்யும் முதல் மூன்று நாடுகளில் ஈரான் மூன்றாமிடம் வகிக்கிறமை குறிப்பிடத்தக்கது.