அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் பின்லாந்தின் தலைநகர் ஹெல்சின்கியில் நடைபெற்ற உச்சி மாநாட்டை விமர்சிக்கும் அமெரிக்கர்களை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் கண்டித்துள்ளார்.
குறித்த உச்சி மாநாட்டு முடிவுகளை இந்த விமர்சகர்கள் குறைத்து மதிப்பிட முயல்வதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், தங்களுடைய உள்நாட்டு அரசியல் இலக்குகளுக்காக இரண்டு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை தியாகம் செய்ய அமெரிக்க அதிகார பிரிவுகள் விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
அத்துடன் ஹெல்சின்கி உச்சி மாநாடு மாபெரும் வெற்றி என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளதுடன், இரண்டாவது சந்திப்புக்காகவும் தாம் காத்திருப்பதாக தமது கீச்சகப் பதிவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக கடந்த திங்கள்கிழமை ரஷ்ய அதிபர் புட்டினை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய பின், அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யா தலையிடுவதற்குக் காரணம் இருப்பதாகத் தெரியவில்லை என்று அதிபர் டிரம்ப் கூறியமை அமெரிக்காவில் கடும் விமர்சனங்கள் ஏற்படுத்தியிருந்தது.
அந்த விமர்சனங்களை அடுத்து மறுநாளே தாம் சொல்லவந்தது அதுவல்ல என்றும், ரஷ்யா தலையிட்டிருக்காது என்று சொல்ல ஒரு காரணமும் இல்லை என்று கூற விரும்பியதாகவும், ஒரு வார்த்தை மாறிவிட்டதாகவும் அதிபர் டிரம்ப் விளக்கமளித்திருந்தார்.