இந்தியாவின் மத்திய பாரதீய ஜனதா அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்துள்ளது.
மொத்தம் 451 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்களித்ததுடன், தீர்மானத்துக்கு ஆதரவாக 126 வாக்குகளும், எதிராக 325 வாக்குகளும் கிடைத்த நிலையில் தீர்மானத்தை நிறைவேற்றும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
முன்னதாக இன்று காலை 11 மணிக்கு நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கிய நிலையில், தனது அரசுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோதி இரவு சுமார் 10.15 மணிக்கு தனது பதிலுரையை ஆற்றினார்.
அப்போது, தாங்கள் ஆட்சியில் இருப்போம் என்றும், தாங்கள் இல்லையென்றால் நாட்டில் நிலைத்தன்மையை நீடிக்க விடமாட்டோம் என்று கருதும் காங்கிரஸ், இருக்கும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தங்கள் விருப்பத்தை நிறைவேற்றும் சதிச் செயல்களை செய்கிறது எனவும் பிரதமர் நரேந்திர மோடி சாடியுள்ளார்.
தலித், பின்தங்கியவர்கள், ஏழைகள், விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்க முயலாமல், குறுக்குவழியில் வெற்றி பெற விரும்புகிறது காங்கிரஸ் என்று கூறிய அவர், அம்பேத்காரின் கொள்கைகளை எள்ளி நகையாடிய அந்த கட்சி இன்று அவரின் பெயரில் வாக்கு கேட்கிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.