யாழ்ப்பாணம் செம்மணியை அண்மித்த கல்வியங்காடு – நாயன்மார்க் கட்டுப் பகுதியில் குடிநீர் விநியோகப் பணிகளுக்காக வெட்டப்பட்ட குழியில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
யாழ் – இரணைமடு குடிநீர் திட்டம் இலங்கை அரசாங்கத்தின் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கபடும் நிலையில், அதன்பேர்து வெட்டப்படட குழியில் இந்த மனித எச்சங்கள் மீட்கப்பட்டமை குறித்து சபையின் அதிகாரிகளுக்கு தொழிலாளர்கள் அறிவித்தனர்.
சபையின் அதிகாரிகள் மனித எச்சங்கள் காணப்பட்ட பகுதியை நேரில் வந்து பார்வையிட்டதுடன், இது தொடர்பில் காவல்துறைக்கு அறிவித்த போதிலும், அவர்கள் நடவடிக்கை எதனையுமே எடுக்கப்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது.
முறைப்பாட்டினை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், மனித எச்சங்கள் உள்ள பகுதியை பார்வையிடவில்லை எனவும், மாறாக அதிகாரிகளுடன் பேசிவிட்டுச் சென்றதாகவும் அங்குள்ள தொழிலாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
கல்வியங்காடு நாயன்மார்க்கட்டில் குடிநீர் விநியோகப் பணிகளுக்காக வெட்டப்பட்ட குழியில் இருந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்ட குறித்த அந்தப் பகுதியில், போர்க்காலத்தில் முன்னரங்கு காவலரண் அமைத்து சிறிலங்கா இராணுவம் நிலை கொண்டிருந்ததாக அந்தப் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
இந்திய நிறுவனம் ஒன்று இந்தக் கட்டடப் பணியில் ஈடுபட்டுள்ளதனால், மனித எச்சங்கள் மீட்கப்பட்ட விவகாரத்தை அவர்கள் முக்கியப்படுத்தவில்லை எனவும், விசாரணைக்காக கட்டடப் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்த இந்திய நிறுவன அதிகாரிகளும் விரும்பவில்லை என்றும், இதனால் தொடர்ந்தும் பணிகளை முன்னெடுக்க காவல்துறை அனுமதித்துள்ளதாகவும் அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனைத அடுத்து, 1998ம் ஆண்டு காலப்பகுதியில் யாழ் குடாநாட்டின் காணாமல் போனோர்களது புதைகுழியென அடையாளப்படுத்தப்பட்ட செம்மணி பகுதியில் மேலும் புதைகுழிகள் இருக்கலாமென்ற சந்தேகம் வலுத்துள்ளது.
மாணவி கிருசாந்தி குமாரசாமி படுகொலையின் சூத்திரதாரியான கோப்ரல் ராஜபக்ஸ அக்காலப்பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர் யுவதிகள் படையினரால் கொல்லப்பட்டு செம்மணி பகுதியிலேயே புதைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்திருந்ததுடன், சில புதைகுழிகளை அடையாளம் காட்டிய நிலையில் அதிலிருந்து எரும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.