தடைப்பட்டுப் போயுள்ள NAFTA எனப்படும் வட அமேரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாடு குறித்த பேச்சுக்கள், எதிர்வரும் சில வாரங்களில் மீள ஆரம்பமாகும் என்று அமெரிக்காவுக்கான கனேடிய தூதர் டேவிட் மக்னோட்டன்(David MacNaughton) நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் வாகன வணிகத் துறையில் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம், முடங்கிப் போயுள்ள பேச்சுவார்த்தைகளை மீண்டும் வழமைக்கு கெர்ணடுவர முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கனடா, அமெரிக்கா மற்றும் மெக்சிக்கோ ஆகிய நாடுகளுக்கு இடையேயான இந்த உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தைகள், கடந்த யூலை மாதம் முதலாம் நாள் இடம்பெற்ற மெக்சிக்கோவின் அதிபர் தேர்தல் உள்ளிட்ட காரணங்களால், கடந்த மே மாதத்தில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலையில் இந்த மாதத்தின் இறுதியில், அல்லது அடுத்த மாதத்தின் தொடக்கத்தில் பேச்சுக்கள் ஆரம்பமாகும் என்று தாம் திடமாக நம்புவதாக அமெரிக்காவுக்கான கனேடிய தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியின் போதே இதனைத் தெரிவித்துள்ள அவர், பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு கனடா எந்த வேளையிலும் தயாராகவே உள்ளது என்பதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் அமெரிக்கா மற்றும மெக்சிக்கோ ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் அதற்கு தயாராவதற்காக காத்திருக்க வேண்டியுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.