ஒன்ராறியோவில் ஏற்பட்டுள்ள 55 காட்டுத்தீச் சம்பவங்களில் 21 காட்டுதீ கட்டுப்பாட்டை மீறி பரவி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒன்ராறியோவின் வடகிழக்கு பிராந்தியங்களின் பல்வேறு இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ள நிலையில, நேற்று இரவு வரையிலான நிலவரப்படி, 55 இடங்களில் தீயணைப்பு படையினர் காட்டுத்தீயினை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவற்றில் 21 காட்டுத்தீப் பரவல் சம்பவங்கள் இதுவரை கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்படவிலலை எனவும், கட்டுப்பாடடை மீறி அது தொடர்ந்து பரவி வருவதாகவும் ஒன்ராறியோ இயற்கைவளங்கள் மற்றும் வனவளத்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக Timmins பகுதிக்கு வடகிழக்கே ஏற்பட்டுள்ள காட்டுத்தீ இன்னமும் கட்டுப்பாடின்றி தீவிரமாக பரவி வருவதாகவும், இதுவரை அது 4,899 ஹெக்டேயர் வனப்பகுதியை அழித்துவிட்டதாகவும் அவர்க்ள தகவல் வெளியிட்டுள்ளனர்.
அதேபோல பிறிதொரு இடத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ இதுவரை 5,612 ஹெக்டேயர் காட்டுப் பகுதியை தீக்கிரையாக்கிவிட்டதாகவும், நேற்று முழுவதும் அங்கு நீர்த்தாங்கி வானூர்திகளும், உலங்குவானூர்திகளும் தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த தீப்பரவல்களை அடுத்து பெருமளவு மக்களை உடனடியாக வெளியேறுமாறான உத்தரவு கடந்த சனிக்கிழமை பிறப்பிக்ப்பட்டதுடன், மேலும் சில பகுதி மக்களை எந்த நேரமும் வெளியேறத் தயாராக இருக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
அத்துடன் French River மாகாண பூங்கா முற்றாக மூடப்பட்டுள்ளதுடன், அங்கு சுற்றுலா முகாம்களை அமைத்து தங்கியிருந்தோர் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.