சிறிலங்கா இராணுவ முகாம்களின் உட்கட்டமைப்பு விடயங்களுக்கான நிதி ஒதுக்கம் கிடைக்கப்பெற்றதன் பின்னர், பாதுகாப்பு மீளாய்வு செய்யப்பட்ட காணிகளை விடுவிப்பதில் சிக்கல் இருக்காது என்று சிறிலங்கா இராணுவம் அறிவித்துள்ளது.
இராணுவப் பேச்சாளர் சுமித் அத்தபத்து இதனை கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
வடக்கில் 522 ஏக்கர் காணிப் பரப்பை விடுவிக்க தீர்மானித்திருப்பதாக இராணுவத்தினால் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், இன்னும் அதற்கான காலம் தீர்மானிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விடுவிக்கப்படவுள்ள காணிகளில் அமைந்துள்ள இராணுவக் கட்டமைப்புகளை இடமாற்றுவதற்கான நிதியை மீள்குடியேற்றத்துறை அமைச்சு வழங்க வேண்டும் எனவும், குறித்த நிதியளிப்பு இடம்பெற்றதன் பின்னர், அந்த காணிகள் பொதுமக்களுக்கு விடுவிக்கப்படும் என்றும் சிறிலஙஹ இராணுவப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.