யாழ். குடாநாட்டில் தற்போது சுமார் 14 ஆயிரம் இராணுவத்தினரே நிலை கொண்டிருப்பதாக யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா ஆக்கிரமிமப்பு படைகளின் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷண ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.
வடக்கில் இருந்து படைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றின் கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
யாழ். குடாநாட்டில் தற்போது, 51, 52, 55 என்று மூன்று படைப்பிரிவுகள் நிலை கொண்டுள்ளன எனவும், இவற்றைச் சேர்ந்த சுமார் 14 ஆயிரம் படையினர் தற்போது தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம், யாழ்ப்பாணத்தில் உள்ள படைகளின் கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்ற பின்னர், யாழ். குடாநாட்டில் இருந்து படையினரின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை எனவும், 2009ஆம் ஆண்டு போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது, யாழ் குடாநாட்டில் சுமார் 45 ஆயிரம் படையினர் நிலை கொண்டிருந்தனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
எனினும் போர் முடிந்து 18 மாதங்களுக்குப் பின்னர், 2010ஆம் ஆண்டு ஒக்ரோபரில் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் எண்ணிக்கையைக் குறைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது எனவும், படிப்படியாக இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2014 ஆம் ஆண்டு சனவரி மாதம், மேஜர் ஜெனரல் உதய பெரேரா, யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள படைகளின் தளபதியாக பொறுப்பேற்ற போது, குடாநாட்டில் படையினரின் எண்ணிக்கை 14,600 ஆக குறைக்கப்பட்டிருந்தது எனவும், 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற அதிபர் தேர்தலுக்கு முன்னரே, குடாநாட்டில் படையினரின் எண்ணிக்கை 14 ஆயிரமாக குறைக்கப்பட்டு விட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.