மன்னார் ‘சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று 41 ஆவது தடவையாக அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றன.
மன்னார் நீதவான் பிரபாகரன் முன்னிலையில், சட்ட வைத்திய நிபுனர் தலைமையில் குறித்த பணிகள் இடம் பெற்று வருகின்றன.
தற்போது வரைக்கும் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் மற்றும் எலும்புக்கூடுகள், மண்டையோடுகள் சுமார் 52 பெட்டிகளில் அடைக்கப்பட்டு பாதுகாப்புக் கருதி மன்னார் நீதவான் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அறையொன்றில் வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் கண்டு பிடிக்கப்பட்ட மனித மண்டையோடுகள், மற்றும் எலும்புக்கூடுகள் ஆகியவற்றை வெளியேற்றும் நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, அகழ்வு பணிகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த மார்ச் மாதம் மன்னார் சதொச விற்பனை நிலைய கட்டுமானப் பணியின் போது மேற்கொள்ளப்பட்ட மணல் அகழ்வின் போது கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்களைத் தொடர்ந்து, இது சம்பந்தமாக சட்ட ரீதியான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு இப் பகுதியில் அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை மன்னாரில் நடைபெற்று வரும் மனித எச்சங்களுக்கான அகழ்வு பணிகளை பார்வையிடுவதற்காக காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலக அதிகாரிகள் இருவர் மன்னாருக்குச் சென்று நேரடியாக பார்வையிட்டதுடன் நிலைமைகளை அறிந்தும் கொண்டுள்ளனர்.
இன்றுடன் 41 ஆவது நாட்களாக இந்த அகழ்வுப் பணி இடம்பெற்று வரும் நிலையில், 32 எலும்புக்கூடுகள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் 52 எலும்புக்கூடுகள், மண்டையோடுகள் அடையாளமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அகழ்வுப் பணியின்போது 75 சென்றி மீற்றர் நீளம் கொண்ட எலும்புக்கூடு ஒன்றும் கண்டு பிடிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளதால் இது ஒரு சிறுவருடையதாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டோர் கொழும்பு அலுவலகத்திலிருந்து இரண்டு அதிகாரிகள் இன்று வடபகுதிக்கு சென்று, அங்கு நடைபெற்று வரும் அகழ்வு பணிகளை நேரடியாக பார்வையிட்டதுடன், நிலைமைகளையும் இதற்கு பொறுப்பாக இருக்கும் சட்ட வைத்திய அதிகாரியிடம் கேட்டு அறிந்து கொண்டனர்.