இலங்கை அரசாங்கம் வட மாகாண சபைக்கான தேர்தலை உரிய காலத்தில் நடத்தாது பிற்போட நினைப்பது அரசாங்கத்தின் பலவீனத்தை எடுத்துக் காட்டுகின்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
மாகாண சபை தேர்தலை பழைய முறைமையிலே நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளமை வரவேற்கத்தக்க விடயம் எனவும், கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வாக்குகளை தம் பக்கம் திருப்பிக் கொள்ள அரசாங்கம் நுணுக்கமான முறையில் தேர்தல் திருத்தச்சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வந்து புதிய தேர்தல் முறைமையினை நடைமுறைப்படுத்திய போதிலும், அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு அரசாங்கத்துக்கே எதிராக அமைந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் வடமாகாணம் தவிர்ந்து ஏனைய ஐந்து மாகாணங்களுக்கு தேர்தலை நடத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது எனவும், வட மாகாண சபை தேர்தலையே முதலில் நடத்த வேண்டும் எனவும், ஏனெனில் அந்த மாகாணத்திலேயோ பாரிய அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகள் காணப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆறு மாகாண சபைகளின் பதவி காலம் முடிவடைந்துள்ளது எனவும், குறிப்பாக வடக்கு மாகாண சபையே தற்போது தேர்தலை வேண்டி நிற்கின்றது எனவும், அங்கு உரிய காலத்தில் தேர்தல் நடத்தினால் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும் என்றும், ஆனால் அரசாங்கம் வடமாகாண சபை தேர்தலை பிற்போட முயற்சிப்பது அதன் நிர்வாக பலவீனத்தை வெளிப்படுத்துகின்றது என்றும் கெஹலிய ரம்புக்வெல மேலும் தெரிவித்துள்ளார்.