இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் 174 படகுகளையும் விடுவிக்குமாறு இலங்கை அரசாங்கம் பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2014ஆம் ஆண்டு தொடக்கம் இந்த 2018ஆம் ஆண்டு யூன் மாதம் வரையில் கைப்பற்றப்பட்ட படகுகளே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் சனிக்கிழமைக்கு முன்னதாக அனைத்து படகுகளையும் விடுவிக்குமாறு இல்ஙகை வெளியுறவு அமைச்சகத்திற்கு, சட்டமா அதிபர் திணைக்களம் பணித்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தின் புதுக்கோட்டை, நாகபட்டிணம், இராமநாதபுரம், காரைக்கால் மற்றும் தஞ்சாவூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களின் படகுகளே இவ்வாறு இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து படகுகளையும் விடுவித்துவிட்டு, இனிவரும் காலத்தில் கைப்பற்றப்படும் படகுகளுக்கே புதிய நடைமுறைப்படி அபராத தொகையை விதிக்க இல்ஙகை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.