இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் இலங்கையில் போதைப் பொருட்களுடன் 48,129 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 19,441 பேர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து 173 கிலோ 319 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 2,975 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது எனவும், கைது செய்யப்பட்டவர்களில் வெளிநாட்டைச் சேர்ந்த 22 பேரும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா, நேபாளம், மாலைத்தீவு, ஜேர்மன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களில் பெரும்பாலானோர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இலங்கை முழுவதும் பல்வேறு இடங்களில் நேற்றிரவு 09 மணி முதல் இன்று காலை 08 மணிவரை மேற்கொள்ளப்பட்ட சுற்றுவளைப்பு நடவடிக்கையில் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 3,325 பேரை கைது செய்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
குறித்த இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையானது காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கு அமைவாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும், இந்த சுற்றிவளைப்பில் வாகன போக்குவரத்து விதி மீறல் தொடர்பாக 5,808 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.