ரொரன்ரோ மாநகரசபையின் உறுப்பினர்கள் எண்ணிக்கையினை ஏறக்குறைய அரைப்பங்காக குறைக்கும் திட்டத்தினை ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் வலியுறுத்திவரும் நிலையில், அதனை ரொரன்ரோ நகரபிதா ஜோன் ரொறி வன்மையாக கண்டித்துள்ளார்.
டக் ஃபோர்ட்டின் குறித்த இந்த திட்டம் பிழையானது எனவும், நீதி அற்றது என்றும் தெரிவித்துள்ள ஜோன் ரொறி, அவ்வாறு ஒரு மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டுமாக இருந்தால் அந்த திட்டம் பொதுவாக்கெடுப்பிற்கு விடப்பட்டு வெற்றிகொள்ளப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
ரொர்னரோ நகரசபையின் உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட திட்டமிடப்ட்டிருக்கும் 47 பேர் என்ற எண்ணிக்கையை 25ஆக குறைக்கப்போவதாகவும், அதற்கான தீர்மானத்தை திங்கட்கிழமை ஒன்ராறியோ சட்டமன்றில் முன்வைக்கவுள்ளதாகவும் டக் ஃபோர்ட் இன்று காலையில் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் தனது இந்த முடிவினை நியாயப்படுத்தியுள்ள அவர், ரொரன்ரோவில் ஆயிரக்கணக்கானோருடன் இது தொடர்பில் ஆலோசித்துள்ளதாகவும், அனைவரும் ரொரன்ரோ நகரசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்கவேண்டும் என்று கூறுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
எனினும் டக் ஃபோர்ட்டின் இந்த திட்டம் தொடர்பில் தனது கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ள ரொரன்ரோ நகரபிதா ஜோன் ரொறி, இது குறித்து தான் மிகவும் கேபமடைந்துள்ளதாகவும், இது மக்களை மதிக்கும் செயல் அல்ல எனவும் சாடியுள்ளார்.
சனநாயக முறைமையின் கீழ் இவ்வாறான ஒரு பெரும் மாற்றத்தினை அல்லது முடிவினை மேற்கொள்ளும் போது, அது பொ வாக்கெடுப்புக்கு விடப்பட்டு, உரிய நடைமுறைப்படி மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.