யாழ்ப்பாணம் கோட்டைக்குள் சிறைச்சாலை இருந்த பகுதிக்கு அண்மையாக நடத்தப்பட்ட அகழ்வு ஆய்வுப் பணிகளில், அங்கு 2 ஆயிரத்து 700 ஆண்டுகளுக்கு முன்னர், ஆதி கால மக்கள் வாழ்ந்ததற்கான நம்பகரமான – உறுதியான சான்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று தொல்லியல் பேராசிரியர் புஷ்பரட்ணம் தெரிவித்துள்ளார்.
கோட்டைப் பகுதியில் வாழ்ந்த மக்கள், தென்கிழக்கு ஆசியா, மேற்கு ஆசியா மற்றும் ஆபிரிக்கா நாடுகளுடன் வணிக உறவு கொண்டிருந்தமையையும், அதன் முக்கிய நிலையமாக யாழ்ப்பாணம் கோட்டைப் பிரதேசம் அமைந்திருந்தது என்பதையும் உறுதிப்படுத்தும் சான்றுகளும் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வு ஆராய்ச்சிப் பணிகள் தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று தொல்பொருள் திணைக்களத்தில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணக் கோட்டையில் இருந்த ஒல்லாந்தர் காலத் தேவாலயம் அழிவடைந்துள்ளதாகவும், அந்த ஆலயத்தின் வரலாற்றுத் தொன்மையை ஆராய்வது மற்றும் அதனை மீள் உருவாக்கம் செய்வதே இந்த தொல்லியல் ஆய்வுப் பணியின் நோக்கமாகும் என்றும், அத்துடன் ஐரோப்பியர் – போர்த்துக்கீசர் வருகைக்கு முன்னர் கோட்டைப் பகுதி எவ்வாறு இருந்தது என்பதை அறிவதும் இந்த ஆய்வின் முக்கிய நோக்கமாக இருந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.
ஆய்வுகளின்பேர்து 9 கலாசார மண் அடுக்குகள் கண்டறியப்பட்டன எனவும், யாழ்ப்பாணக் கோட்டைப் பகுதியில் தென்னிந்தியா அல்லது தமிழகம், கந்தரோடை, அநுராதபுரம், பூநகரி மற்றும் சாட்டி போன்ற இடங்களில் இருந்ததை ஒத்த ஆதி கால மக்கள் வாழ்ந்ததற்கான நம்பகரமான – உறுதியான சான்று கிடைத்துள்ளது என்றும், 2 ஆயிரத்து 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட கால பகுதியில் இவ்விடங்களில் ஆதி கால மக்கள் வாழ்ந்தார்கள் என்பது உறுதியாவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.