குற்றவாளிகளைத் தண்டிக்க முடியாத காணாமல்போன அலுவலகத்தினால், மக்களுக்கு என்ன பயன் கிடைக்கப் போகிறது என்று, வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
காணாமல் போனோர் அலுவலகம் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யக் கூடிய அலுவலகம் அல்ல எனவும், பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரைகளுக்கு அமைய குற்றவாளிகளுக்கு அரசாங்கம் தண்டனையைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் நியமிக்கப்பட்ட பரணகம ஆணைக்குழு தற்காலிகமானது எனவும், ஆனால் தற்பொழுது அமைக்கப்பட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் நிரந்தர அலுவலகமாக இருக்கின்றபோதிலும், மக்களின் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்யக் கூடிய ஒரு அலுவலகமாக அது தென்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல்போனோர் அலுவலகத்தின் தலைவர் மனிதாபிமானம் மிக்க ஒருவர் என்பதுடன், பல தமிழ் இளைஞர்கள் சார்பில் நீதிமன்றங்களில் வாதாடியுள்ளார் என்ற போதிலும், அது மட்டும் ஒரு அலுவலகத்தை திறன்மிக்கதாக ஆக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.
பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையில் பிழை செய்தவர்கள் மற்றும் கைதுசெய்யப்பட்டவர்கள் என்று 2,000ற்கும் அதிகமானவர்கள் தொடர்பான விபரங்கள் வழங்கப்பட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கடந்த அரசிடம் வலியுறுத்தப்பட்டிருந்தத போதிலும், இதுவரை எவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள அவர், அதுபோன்றதொரு நிலை இந்த காணாமல்போன அலுவலகத்துக்கும் ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அது மாத்திரமன்றி குறித்த அலுவலகத்துக்கு விசாரணை செய்வதற்கான அதிகாரம் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது எனவும், குற்றம் புரிந்ததாக காணப்பட்டால் அதுபற்றி உரிய தரப்புக்கு அறிவிக்க வேண்டும் என்றும், அவ்வாறு அறிவிக்கத் தவறினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த பிரதிபலனும் கிடைக்கப்போவதில்லை எனவும் அவர் விபரித்துள்ளார்.
விசாரணைகளின் அடிப்படையில் காணாமல் ஆக்கப்பட்டவர் கொலை செய்யப்பட்டார் என்று அறியப்பட்டு, அதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்களும் அடையாளப்படுத்தப்பட்ட பின்னர், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கமுடியாவிட்டால் இந்த அலுவலகத்தால் எந்தப் பயனும் இல்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு முன் ஏற்பட்ட தீர்மானமானது, காணாமல் ஆக்கப்பட்டோர் மீது தவறிழைத்தோர் சம்பந்தமாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றிருக்கின்ற போதிலும், தவறிழைத்தோர் பற்றிய செய்திகளை அந்தரங்கச் செய்திகளாக்கி, அது சம்பந்தமாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விவரங்கள் அறிய முடியாது என்றிருப்பதும் கேள்விக்குறியாக உள்ளது எனவும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
குற்றங்களை இனம் காண வேண்டும், குற்றம் செய்தவர்களைச் சட்டப்படி குற்றவாளிகளாகக் காணப்பட்டபின் தண்டிக்க வேண்டும் என்ற எண்ணம் இன்றைய அரசாஙகத்திற்கு இல்லை எனவும், அப்படியாயின் மனித உரிமை மீறல்களை மூடிவைக்கும் உத்தேசம் இந்த அரசாங்கத்திற்கும் உண்டா என்று கேள்வியும் எழுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அலுவலகத்தால் ஆகக் கூடியது காணாமல் போன சிலருக்கு என்ன நடந்ததென்று அறிந்து கொள்ள கூடியதாக இருக்கும் என்ற போதிலும், அவர்களுக்கு மரணத்தை உண்டுபண்ணியவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள் எனவும், அவர்கள் தொடர்ந்து நல்லவர்கள் போன்று உலகில் உலாவரக் கூடிய வாய்ப்புக்கள் உருவாக்கி கொடுக்கப்படுகின்றது எனவும் அவர் விபரித்துள்ளார்.
இவ்வாறான குறைபாடுகளுக்கு இலக்கான பரணகம ஆணைக்குழு போன்ற ஆணைக்குழுக்கள், சட்டத்தில் இருந்த குறைகளை நிவர்த்தி செய்ய சிபார்சு செய்த நடவடிக்கைகளை அடையாளம் கண்டு, எவ்வகையில் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் கருத்துடைய அதிகாரமுடைய அலுவலகமாக மாற்ற முடியுமோ அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.