2020ஆம் ஆண்டு கூட்டரசு ஊடாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குரிய வாய்ப்பு இருக்கின்றது என்று இலங்கையின் முன்னாள் அரச தலைவரும், கூட்டரசை உருவாக்குவதில் முக்கிய பங்காளராகப் பணியாற்றியவருமான சந்திரிகா குமாரதுங்க யாழ்ப்பாணத்தில் வைத்துத் தெரிவித்துள்ளார்.
தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலக கலந்துரையாடல், யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற நிலையில், இந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தனது ஆட்சிக் காலத்தில் சிறந்த பல திட்டங்களை உருவாக்கியதாகவும், அதிகாரப் பரவலாக்கத்துடன்கூடிய ஒரு தீர்வு யோசனை முன்வைத்ததாகவும், அதனை மாற்றுக் கட்சியினர் எதிர்த்தார்கள் என்றும், இத்தகைய நிலையே கடந்த காலங்களில் இருந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு கட்சி ஒரு விடயத்தை செய்யும்போது மற்றொரு கட்சி அதனை எதிர்க்கும் நிலையே இதுவரை இருந்த போதிலும், தற்போதைய சூழலானது சிறந்ததொரு சந்தர்ப்பம் எனவும், இரண்டு கட்சிகள் இணைந்து ஆட்சி அமைத்துள்ள இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அரசியல் தீர்வுத் திட்டங்கள் மற்றும் நடைமுறைப்படுத்தப்படுகின்ற திட்டங்களை சிறந்த முறையில் செயற்படுத்தவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வடக்கில் ஆங்கிலம், விஞ்ஞான பாடத்தில் பெறுபேறுகள் குறைவாக காணப்படுவதாகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானம் சார்ந்த துறையில் சிங்கள மாணவர்களே அதிகம் உள்ளதைக் காணமுடிகின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்த போது, கற்பிப்பதற்கு ஆசிரியர் பற்றாக் குறையும், விஞ்ஞானம் சார்ந்த பாடங்களை கற்பதற்கு மாணவர்கள் தயார் இல்லாத நிலையும் காணப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை மாற்றி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு அமைச்சை பனித்துள்ளதாகவும், இரண்டு ஆண்டுக்குள் தம்மால் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் சிறப்பான ஒரு நிலையை அடைந்திருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.