மன்னார் மனித புதைகுழியிலிருந்து இன்றும் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மன்னார் ‘சதொச’ விற்பனை நிலையம் அமைந்திருந்த பகுதியில் இன்று 47 ஆவது நாளாகவும், அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், இதன்போது முன்னதாக கண்டுபிடிக்கப்பட்டு அடையாளமிடப்பட்டிருந்த மனித எலும்புக் கூடுகள், மண்டை ஓடுகளை வெளியேற்றும் நோக்குடன் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுள்ளன.
தற்போது அகழ்வு பணியானது மையப்பகுதியை விடுத்து, வளாகத்தின் நுழைவு பகுதியிலேயே அதிக கவனம் செலுத்தி தோண்டப்படுவதுடன், குறித்த இடத்திற்கு அருகாமையிலுள்ள நடை பாதையில் ஐந்து அடி ஆழத்திற்கு அகழ்வை விரிவுபடுத்திய இடத்திலும் அகழ்வு இடம் பெற்று வருகின்றது.
இந்த நிலையில் இன்றும் சந்தேகத்திற்குரிய மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், குறித்த வளாகத்தில் இரு வேறு பகுதிகளில் வித்தியாசமான நிலையில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வளாகத்தின் மையப்பகுதியில் எந்த வித குழப்பமும் இன்றி ஒழுங்கான நிலையில் புதைக்கப்பட்ட மனித எச்சங்கள் சிலவும், வளாகத்தின் நுழைவு பகுதியில் ஒன்றுடன் ஒன்று சேர்த்த விதமாகவும் புதைக்கபட்ட மனித எச்சங்கள் மீட்கப்பட்டிருந்தன.
இது வரை குறித்த வளாகத்தில் இருந்து 66 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், 56 மனித எச்சங்கள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இதுவரை மீட்கப்பட்ட 56 மனித எச்சங்கள் 440 பைகளில் இலக்கமிடப்பட்டு பொதி செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை இந்த வாரம் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளில் இரண்டு மோதிரங்கள் தடைய பொருட்களாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.