தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் விஸ்வலிங்கம் மணிவண்ணனை மாநகர சபை அமர்வுகளில் பங்கேற்பதற்கும், வாக்களிப்பதற்கும் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்று இன்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குள் நிரந்தரமாக வதியாத ஒருவர் உறுப்பினராக தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டமை உள்ளூராட்சி தேர்தல் விதியை மீறும் செயல் என்று மனுதாரர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
எனவே அகில இலங்கை தமிழ் காங்கிரசால் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் மணிவண்ணனை அந்தப் பதவியிலிருந்து நீக்கி கட்டளையிடவேண்டும் என்று மனுதாரர் கோரியிருந்தார்.
யாழ்ப்பாண மாநகர சபை தேர்தல் வேட்புமனுத் தாக்கல் செய்யும் போது மாநகர சபை எல்லையில் வதிவிடம் கொண்டிருந்ததாக எதிர்மனுதாரரான யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி ஆட்சேபனையை முன்வைத்தார்.
எனினும் 2017ஆம் ஆண்டு வாக்காளர் பதிவின் போது, உறுப்பினர் மணிவண்ணன் யாழ்ப்பாண மாநகர சபை எல்லையில் வதியவில்லை என்று மனுதாரர் தரப்பில் முன்னிலையான சனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் மறுத்துரைத்தார்.
இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் இருவர் அடங்கிய அமர்வு, மனுதாரரால் கோரப்பட்ட இடைக்கால நிவாரணமான இந்த வழக்கு தீர்ப்பளிக்கப்படும் வரை, மணிவண்ணன் சபை அமர்விலோ வாக்களிப்பிலோ பங்கேற்பதற்க முடியாது என்று இடைக்காலத் தடை கட்டளையை வழங்கியுள்ளது.
இதேவேளை விஸ்வலிங்கம் மணிவண்ணனின் வதிவிடம் தொடர்பாக வழக்கு தொடர்ந்து தனது சட்ட நிபுணத்துவத்தினால் வாதாடி வெற்றி பெற்ற சனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனால், தமிழ்மக்களின் உரிமை மற்றும் அவர்களின் வாழ்வியல் தொடர்பாக உள்ள இடர்களை நீக்குவது தொடர்பாக நீதிமன்றில் இதுவரை எந்த வழக்குகளையும் தொடராமல் இருப்பது ஏன் என்று மற்றொரு மாநகரசபை உறுப்பினரான வரதராசா பார்த்தீபன் கேள்வி எழுப்பியுள்ளார்.
முள்ளிவாய்கால் இனவழிப்பு தொடர்பாக நீதிமன்றில் வழங்குத் தொடர எந்த ஆதாரமும் இல்லை என்று குறிப்பிட்ட சனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன், சூறையாடப்படுகின்ற தமிழ்மக்களின் பாரம்பரிய நிலங்கள் தொடர்பாக வழக்கு தொடர்பில் நீதிக்காக போராட்ட முயலாத சனாதிபதி சட்டத்தரணி, அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக எந்த ஒரு வழக்கையும் தாக்கல் செய்து வாதாடாத சனாதிபதி சட்டத்தரணி, ஒரு சாதாரண மனிதனின் வதிவிடம் தொடர்பில் வழக்கு தொடர்ந்து வாதிட்டு தனது சட்ட நிபுணத்துத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்பதனை நினைத்து பெருமை கொள்வதா அல்லது தலைகுனிவதா எனவும் பார்த்தீபன் கேள்வி எழுப்பியுள்ளார்.