ரொரன்ரோ நகரில் தீவிரமடைந்துவரும் துப்பாக்கி வன்முறைகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக ஒன்ராறியோ மாநில அரசாங்கத்திடம் இருந்து ரொரன்ரோ நகர நிர்வாகம் 25 மில்லியன் டொலர்களைப் பெற்றுக்கொள்ளவுள்ளது.
துப்பாக்கி வன்முறைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ரொரன்ரோ காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுவரும் நிலையில், அவர்களின் நடவடிக்கைகளுக்கு உதவியாக மாநில அரசாங்கம் இந்த நிதி உதவியை வழங்குவதாக ஒன்ராறியோ முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்து்ளளன.
தம்மால் வழங்கப்படும் இதே அளவு நிதி உதவியை மத்திய அரசாங்கமும் ரொரன்ரோ நிர்வாகவும் இந்த செயல்திட்டத்திற்காக வழங்க வேண்டும் என்றும் ஒன்ராறியோ மாநிலத்தின் முற்போக்கு வழமைவாதக் கட்சி அரசு எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது.
எனினும் மத்திய அரசு மற்றும் மாநகர நிர்வாகத்தின் நிதிப் பங்களிபு குறித்த முடிவுகள், தற்போது தம்மால் அறிவிக்கப்பட்டுள்ள இநத நிதி உதவியில் எந்தவித மாற்றத்தினையும் ஏற்படுத்தாது எனவும் அது தெரிவித்துள்ளது.
ரொரன்ரோவில் கைத்துப்பாக்கிகளின் விற்பனையைத் தடை செய்யுமாறு கோரிக்கை விடுத்து, பிரதமர் ஜஸ்டின் ரூடோவுக்கு ரொரன்ரோ நகரபிதா ஜோன் ரொறி கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ள நிலையில், மாநில அரசின் நிதிப் பங்களிப்ப தொடர்பிலான இந்த தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒன்ராறியோ மாநில அரசின் இந்த நிதி உதவி குறித்த தகவல்கள் இன்று வெளியாகியுள்ள போதிலும், அது குறித்த உத்தியோக பூர்வ அறிவிப்பு எதிர்வரும் வியாழக்கிழமையே வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.