வடமாகாண முதலமைச்சர் வின்னேஸ்வரன் காவல்துறை அதிகாரத்தை கேட்பதில் நியாயம் இருப்பதாகவும், அத்துடன் வடக்கில் இடம்பெறும் வாள்வெட்டு சம்பவங்களின் பின்னணியில் சிறிலங்கா இராணுவத்தினர் இருப்பதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய இதனை தெரிவித்துளள அவர், யாழ்ப்பாணத்தில் அண்மைய நாட்களாக வாள்வெட்டு சம்பவங்கள் தலைதூக்கியுள்ளன எனவும், இதன் பின்னணியில் சிறிலங்கா இராணுவத்தினரே இருக்கின்றர் என்றும், வாள்வெட்டு சம்பவங்களில் ஈடுபடுகின்றவர்கள் இராணுவ முகாம்களுக்கு இருந்தே வந்து செல்கின்றனர் என்று தெரிவிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
காவல்துறையினரும் இது குறித்து நடவடிக்கை எடுப்பதில்லை என்ற நிலையில், யாழ்ப்பாணத்தில் இருக்கும் எமது இளைஞர்கள் பலரும் இதனால் பாதிக்கப்படுகின்றனர் என்பதுடன், அவரிகளின் தாய்மார் கண்ணீர் விடுகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறான நிலையிலேயே வடமாகாண முதலமைச்சர் காவல்துறை அதிகாரத்தை கோரியுள்ளார் எனவும், அவர் இவ்வாறு கேட்பதில் நியாயம் இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தமிழகத்திற்கு தனியாக காவல்துறை அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ள அவர், வடக்கில் இடம்பெறும் வாள்வெட்டு சம்பவங்கள் தொடர்பில் காவல்துறையினர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் இதன் போது கோரிக்கை விடுத்துள்ளார்.