தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மூடிமறைத்து, ஜ.நாவில் இலங்கை அரசாங்கத்தை தொடர்ந்து பாதுகாப்பதற்கான சதி வேலைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆரம்பித்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீண்டும் எச்சரித்துள்ளார்.
ஜ.நாவின் கால அவகாசம் முடியும் நிலையில், இலங்கை விடயத்தை பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்வதற்கான சரியான சந்தர்ப்பம் எழுந்துள்ளது என்றும், அதனை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களை இன்று சந்தித்த அவர், எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜ.நா மனித உரிமை பேரவையினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட இரண்டு ஆண்டுகால அவகாசம் முடிவுக்கு வரவுள்ளது என்பதையும், இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பினர் என்ற வகையில், எம்சார்ந்த நிலைப்பாடு ஒன்றினை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் ஆரம்பிக்கும் வரைக்கும் நாங்கள் பொறுத்திருக்க முடியாது எனவும், அவ்வாறு இருப்போமானால் வல்லரசு நாடுகள் இங்கு நடந்த இன அழிப்பு, போர் குற்றம் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை பயன்படுத்தி தங்களுடைய நலன்களை மட்டும் அடைவதற்காக ஜ.நாவை பயன்படுத்தும் நிலை உருவாகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
2012 ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரை தமிழ் மக்களின் விடயத்தில் எந்த முன்னேற்றமும் காணப்படாது, நடு வீதியில் நிற்க விடப்பட்டுள்ளோம் எனவும், பாதிக்கப்பட்டவர்களுடைய குரல் தெளிவாக வெளிப்படாமல் இருந்தால் மீண்டும் ஒரு முறை தமிழ் மக்களின் பெயரை பயன்படுத்தி வல்லரசுகளும் அதன் எடுபிடிகளும், எமது அழிவுகளை தமது தேவைக்காக பயன்படுத்துவார்கள் என்பதில் தமிழ் மக்கள் தெளிவாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏதிர்வரும் மார்ச் மாத கூட்டத் தொடரில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கப் போகின்றது என்பதை அந்தக் கட்சியின் பேச்சாளர் சுமந்திரன் உத்தியோக பூர்வமான கருத்துக்கள் ஊடாக தெளிவுபடுத்தியுள்ளார் எனவும், குறிப்பாக அனைத்துலக விசாரணை என்பது ஜ.நாவினால் 2015 ஆண்டு வெளியிடப்பட்ட 200 பக்க அறிக்கையுடன் முடிவடைந்துவிட்டது என்று கூட்டமைப்பின் பேச்சாளர் உத்தியோக பூர்வமாக கூறுகின்றார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் ஊடாக இனி அனைத்துலக விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், உள்ளக விசாரணையே நடத்த வேண்டும் என்றும் சுமந்திரன் கூறுவதாகவும், அதுமட்டுமல்லாமல் ஜ.நா மனித உரிமை பேரவைக்கு இலங்கை அரசாங்கத்தை மீறி, அந்த அரசாங்கம் விரும்பாத ஒன்றை நடமுறைப்படுத்த முடியாது என்று தெரிவித்து, ஜ.நா மனித உரிமை பேரவை ஒரு பலவீனமான அரங்கு என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது பேச்சாளர் ஊடாக முதற்தடவையாக ஒப்புக் கொண்டுள்ளது எனவும் அவர் சாடியுள்ளார்.
வெறுமனே ஜ.நா மனித உரிமை போரவைக்குள் போர்க் குற்றம், இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை முடக்கும் நடவடிக்கையில்தான் கூட்டமைப்பு தொடர்ந்து முன்னெடுக்கப்போகின்றது எனவும், அதனை தமிழ் மக்கள் சரியாக விளங்கிக் கொள்ள வேண்டுமெனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.