நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்ட பொது பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 6 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்ற தவிசாளரான நீதியரசர் ப்ரதி பத்மன் சூரசேன மற்றும் நீதியரசர் ஷிரான் குணரத்ன ஆகியோரினால் இன்று இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் ஞானசார தேரருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள 4 குற்றச்சாட்டுக்களிலும் அவர் குற்றவாளி என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் இனங்கண்டுள்ள நிலையில், இதற்கமைய அவருக்கு 19 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து, அந்த தண்டனையை ஆறு ஆண்டுகளில் கழியும் வகையில் அனுபவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேநேரம் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரரை, உடனடியாக சிறைச்சாலைகள் பொறுப்பில் எடுக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இதற்கமைய ஞானசார தேரர் சிகிச்சைபெறும் சிறீ ஜயவர்தனபுர மருத்துவமனைக்கு நீதிமன்ற அதிகாரிகள் சிலர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உடல்நலக் குறைவு காரணமாக ஞானசார தேரர் நேற்று முன்தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.