ரஷ்யா மீது தாங்கள் புதிய தடைகளை விதிக்கப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் உள்ள முன்னாள் ரஷ்ய உளவாளி மீது நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நோவிசோக் எனும் நச்சுப்பொருளால் தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது தீர்மானிக்கப்பட்ட பின்னர் அந்த தடைகளை விதிக்கப்போவதாகவும் அது கூறியுள்ளது.
முன்னாள் ரஷ்ய உளவாளியான செர்கெய் ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் யூலியா ஆகிய இருவரும் பிரித்தானியாவில் கடந்த மார்ச் மாதத்தில் நச்சுப் பொருள் தாக்குதலுக்கு உள்ளாகி பல வாரங்களாக வழங்கப்பட்ட கடுமையான மருத்துவ சிகிச்சையின் பின்னர் உயிர் பிழைத்துள்ளனர்.
இந்த நச்சுவாயுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பிரித்தானியா இது தொடர்பில் ரஷ்யா மீது குற்றச்சாட்டுச் சுமத்தியுள்ள போதிலும், இந்த குற்றச்சாட்டுக்களை ரஷ்யா கடுமையாக மறுத்ததுள்ளது.
இந்த நிலையில் கடந்த புதன்கிழமையன்று வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில், இந்த சம்பவம் தொடர்பாக ரஷ்யா மீது தடைகள் விதிக்கும் நடவடிக்கையை அமெரிக்கா செயல்படுத்தவுள்ளதாக அந்த நாட்டு அரசுத்துறை உறுதி செய்துள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பிரித்தானிய அரசு தனது வரவேற்ப்பைத் தெரிவித்துள்ளது.