டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்குள் செல்வதற்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது .
மக்கள் முன்னெடுத்த நீண்ட போராட்டங்களின் பின்னர், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை இரண்டு மாதங்களின் முன்னர் மூடிமுத்திரையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தொழிற்சாலை நிர்வாகம் தொடர்ந்த வழக்கு விசாரணை செய்யப்பட்டு வருவதுடன், அந்த வழக்கின் இன்றைய விசாரணையின் போது தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்குள் செல்ல நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.
அதேவேளை ஆலையை மூடும் தமிழக அரசின் ஆணைக்கு இடைக்கால தடை வழங்குவதற்கு முடியாது என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
தற்போது ஆலையில் நிர்வாக பணிகளை மட்டும் மேற்கொள்ள அனுமதி அளித்துள்ள தீர்ப்பாயம், நிர்வாக ரீதியிலான பணிகளுக்காக ஆலைக்குள் ஊழியர்களை அனுமதிக்க வேண்டும் என்றும், ஆலை இயங்காமல் இருப்பதை தூத்துக்குடி கலெக்டர் கண்காணிக்க வேண்டும் எனவும், ஆலையில் அமில கசிவை கண்காணிக்க தனி அதிகாரியை மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைக்க வேண்டும் எனவும் சில உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது.
அத்துடன் இந்த வழக்கின் விசாரணையை எதிர்வரும் 20ஆம் நாளுக்கும் ஒத்தி வைப்பதாகம் தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.