அடுத்த தேர்தலை மையமாகக் கொண்டே இலங்கையின் சனாதிபதி, பிரதமர், முன்னாள் சனாதிபதி மற்றும் அமைச்சர்கள் வடக்கு நோக்கி படையெடுக்கிறார்கள் என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ள அவர், அண்மைக்காலமாக சனாதிபதி, பிரதமர், முன்னாள் சனாதிபதி மற்றும் பல அமைச்சர்கள் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை செய்யப் போவதாக தெரிவித்து வடக்கு நோக்கி வந்து கொண்டிருப்பதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும், இந்த பொருளாதாரத்தில் அபிவிருத்தியை ஏற்படுத்தப் போவதாகவே அவர்கள் கூறுகின்றார்கள் என்ற போதிலும், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மூன்றரை ஆண்டுகாலம் வடமாகாணத்திலும் சரி, கிழக்கு மாகாணத்திலும் சரி போரினால் பாதிப்படைந்த மக்களினது பொருளாதாரம் மற்றும் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் என்பவற்றை விருத்தி செய்ய கடந்த மூன்று வரவு செலவுத் திட்டங்களில் அரசாங்கம் ஏதாவது செய்துள்ளதா எனப் பார்த்தால், குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய வகையில் எதுவும் இல்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் பல்வேறுபட்ட தீர்மானங்களை மக்கள் பிரதிநிதிகள் நிறைவேற்றினாலும் கூட, அதற்கு தேவையான நிதி மத்திய அரசினால் ஒதுக்கப்படவில்லை எனவும், அண்மையில் கூட இலங்கையில் இருக்கக் கூடிய ஒவ்வொரு பிரதேச செயலகங்களுக்கும் கம்பரிய என்ற திட்டத்தின் கீழ் 200 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதுடன், பின்னர் பிரதேச செயலகத்திற்கு அது 100 மில்லியன் என்று மாற்றப்பட்டு, அதை இன்னும் குறைக்கும் நிலமை தான் காணப்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆகவே வடக்கை நோக்கி வருகின்ற தலைவர்கள் தமிழ் மக்களுக்கு இன்றைக்கு இருக்கக் கூடிய பிரச்சினைகளான பொருளாதார அபிவிருத்தியை செய்தால் போதும் என்ற நினைப்பில் இருக்கிறார்கள் எனவும், ஆனால் அதைக் கூட இந்த அரசாங்கம் சரியாக செய்யவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மூன்றரைஆண்டுகாலத்தில் மாகாண சபைக்கு கூட போதிய நிதி ஒதுக்கப்படவில்லை எனவும், மாவட்ட செயலங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்றும், ஆகவே இவர்களுடைய படையெடுப்பு மற்றும் இவர்களுடைய வருகை என்பது இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு ஒரு மாகாணசபைத் தேர்தல் அல்லது சனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்த தேர்தலை இலக்காக கொண்டு சிறுபான்மை மக்களின் வாக்கைப் பெறுவதற்காகவே இங்கு வருகிறார்கள் என்றும் அவர் விபரித்து்ளளார்.
ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுத்த தமிழ் மக்களுக்கு பொருளாதார ரீதியான அபிவிருத்தியும் இல்லை, அரசியல் தீர்வும் இல்லை என்ற நிலையில், அவர்களின் வருகை மீண்டும் வாக்கைப் பெறுவதற்காகவே உள்ளது எனவும் சிவசக்தி ஆனந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.