தமிழகத்தின் தூத்துக்குடியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதுடன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், காவல்துறை தலைமை அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை உள்ளடக்கி 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடுக்க்பபட்டுள்ளன.
இந்த நிலையில் இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளும் மத்திய புலனாய்வுத் துறைக்கு விசாரணைக்கு மாற்றப்படுவதாக இன்று உத்தரவிட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதையும் இரத்து செய்வதாகவும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையினால் பாதிக்க்பபடுவதாக கூறி அதனை மூடுமாறு போராட்டம் நடாத்திய பொதுமக்களுககு எதிராக கடந்த மே மாதம் 22ஆம் நாள் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 13 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.