முல்லைத்தீவு நாயாறுப் பகுதியில் தமிழர்களின் மீன் வாடிகள் படகுகள் இயந்திரங்கள் அனைத்தும் தீயிட்டுக் கொழுத்தப்பட்டமையினால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவுகின்றது.
இனம் தெரியாதோர் வேண்டுமென்றே வைத்த தீயினால் 8 வாடிகள், 3 படகுகள், 2 இயந்திரங்கள், 27 வலைகள் என்பன முற்றாக தீயில் எரிந்து அழிவடைந்துள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆபத்தான சுருக்குவலையினை மின் ஒளி பாச்சி மீன்பிடிக்கு பயன்படுத்துவதனை தடை செய்ய வேண்டும் என்று உள்ளூர் மீனவர்கள் கடந்த 10 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து நேற்று மாலை இலங்கையின் கடற்றொழில் அமைச்சர் நேரில் சென்று அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி வழங்கியதுடன், அதுவரை குறித்த முறையில் மீன் பிடிப்பதை தடை செய்ய உத்தரவிட்டார்.
இதனை அடுத்து போராட்டமும் கைவிடப்பட்ட நிலையில், இன்று திங்கட்கிழமை மாலை 6 மணியளவில் தென்னிலங்கை மீனவர்கள் இதே தடை செய்யப்பட்ட தொழில் உபகரணங்களை கடலிற்கு கொண்டு செல்ல முயன்ற சமயம் தமிழ் மீனவர்கள் அதனைத் தடுத்து நிறுத்தியிருந்தனர்.
இந்த நிலையிலேயே இலங்கை நேரம் இரவு 11 மணியளவில் தமிழ் மீனவர்களின் வாடிகள் படகுகள் இயந்திரங்கள் வலைகள் என்று அனைத்தும் தீ வைத்து கொழுத்தப்பட்டுள்ளது.
இதனால் பல மில்லியன் இழப்பு ஏற்பட்டதோடு பிரதேசத்தில் பதற்றம் நிலவுகின்ற நிலையில், சம்பவ இடத்துக்கு வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரனும், குறித்த பகுதி பிரதேச சபை உறுப்பினர் மற்றும் காவல்துறையினரும் சென்று நிலைமைகளை பார்வையிட்டு வருகின்றனர்.