இத்தாலியின் வட மேற்கில் அமைந்துள்ள ஜெனோய நகரில் வாகனம் செல்லும் பாலம் ஒன்றின் பெரும்பகுதி இடிந்து விழுந்த சம்பவத்தில் குறைந்தது 26 பேர் பலியாகியுள்ளனர்.
காலை 11.30 மணியளவில் பெய்த கனத்த மழையில் இந்த தொங்கு பாலத்தின் ஒரு பகுதியை தாங்கிய ஒரு கோபுரம் இடிந்தவுடன் இந்த பாலத்தில் சென்ற பல கார்கள் மற்றும் பாரவூர்திகள் தரையில் விழுந்து நொறுங்கியதாக கூறப்படுகிறது.
விழுந்து நசிங்கியுள்ள வாகனங்கள் அல்லது இடிபாடுகளுக்கு இடையில் சிக்குண்டுள்ள மக்களை காப்பாற்றும் நடவடிக்கைகளில் அவசர காலப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதுடன், காயமடைந்த பலர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
650 உயரத்தில் உள்ள மோராண்டி (Morandi)பாலத்தின் கிட்டத்தட்ட 200 மீட்டர் தொலைவுள்ள பகுதி இடிந்துவிழுந்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இடிந்துவிழுந்த மேம்பாலச் சாலை 1960களில் கட்டப்பட்டதுடன், அதன் மறுசீரமைப்புப் பணிகள் 2016ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜெனோவா நகரம் இத்தாலியின் வடமேற்குப் பகுதியில் மலைகளுக்கும் கடலுக்கும் இடையே உள்ளமை குறிப்பிடத்தக்கது.