சர்ச்சைக்குரிய விடயங்கள், தொடர்பில்லாத,பொருத்தமில்லாத விவாதங்களால் கவனத்தை சிதறவிடக்கூடாது என்றும், சமூகத்தில் வன்முறைக்கு இடமளிக்கக் கூடாது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியாவின் 72ஆவது சுதந்திர நாளை ஒட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு ஆற்றியுள்ள உரையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தியின் மந்திரமான அஹிம்சை என்பது, வன்முறையைக் காட்டிலும் மிகவும் வலிமை வாய்ந்தது என்றும் குறிப்பிட்டுள்ள அவர், நாட்டில் பல்வேறு இடங்களில் அப்பாவிகளை சிலர் கும்பலாகச் சேர்ந்து தாக்கும் சம்பவங்கள் நடக்கின்றன என்றும், அது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
பெண்கள் அவர்களின் விருப்பப்படி வாழ உரிமை இருக்கிறது என்ற போதிலும், நாட்டில் அவர்களின் தனிப்பட்ட உரிமை, பாதுகாப்பு போன்றவற்றை இன்னும் போதுமான அளவில் அளிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஒவ்வொரு இந்தியரும் தங்களுக்கு இருக்கும் கடமை, பொறுப்புணர்வு உணர்ந்து, மதித்து வாழ வேண்டும் என்றும், அதிலிருந்து நழுவிடக்கூடாது அதைப் பின்பற்றி வாழ்வதற்கு முயற்சிக்க வேண்டும் எனவும் தமது சுதந்திரநாள் உரையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தியுள்ளார்.