அடுத்த மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 39வது அமர்வில் இலங்கை குறித்த இரண்டு அறிக்கைகள் விவாதிக்கப்படவுள்ளன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 39 வது அமர்வு எதிர்வரும் செப்ரெம்பர் 10 ம் நாள் முதல் 28ம் நாள் வரை ஜெனீவாவில் இடம்பெறவுள்ளது.
இந்த அமர்வில் கண்மூடித்தனமாக தடுத்து வைத்தல் தொடர்பான ஐ.நா செயற்குழு தனது இலங்கை பயணம் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளது.
இதேபோன்று உண்மை நீதியை ஊக்குவித்தல், மீளநிகழாமை தொடர்பான ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளரும் தனது அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ள நிலையில், இந்த இரண்டு அறிக்கைகளையும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை ஆராயவுள்ளது.
இலங்கைக்கு கடந்த ஆண்டு பயணம் மேற்கொண்ட கண்மூடித்தனமாக தடுத்துவைத்தல் தொடர்பான ஐ.நா செயற்குழு இலங்கை நிலவரம் தொடர்பில் கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தனிப்பட்ட சுதந்திரத்திற்கான உரிமையை இலங்கையின் பாதுகாப்பு தரப்பினரும் நீதித்துறையினரும் சட்ட செயலாக்கல் அதிகாரிகளும் மதிக்கவில்லை என்று குறித்த அந்த செயற்குழு குற்றம்சாட்டியிருந்தது.