இன்று பிற்பகல் வேளையில் ரொரன்ரோ பெரும்பாகத்தில் பொழிந்த கடுமையான மழை காரணமாக ரொரன்ரோ நகரின் பல பாகஙகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ரொரன்ரோ உள்ளிட்ட ஒன்ராறியோவின் தென் பிராந்தியங்களுக்கான மழை எச்சரிக்கையினை கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் பிறப்பித்திருந்த நிலையில், இன்று பிற்பகல் மற்றும் மாலை வேளைகளில் கடுமை மழை கொட்டியுள்ளது.
50 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை எதிர்பார்க்கப்படுவதாகவும், இதனால் ஆங்காங்கே வெள்ளப் பெருக்கு ஏற்படக்கூடும் என்றும் ஏற்கனவே குறித்த அந்த எச்சரிக்கை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, மழை வெள்ளம் ஏற்பட்டு பல்வேறு பாதிப்புகளைத் தொற்றுவித்துள்ளது.
பீல், யோர்க், டூர்ஹாம் பிராந்தியங்கள் மற்றும் ஹமில்ட்டன் நகரம், ரொரன்ரோ நகரம் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியதாக, இன்று பிற்பகல் 4.15 அளவில் பிறப்பிக்கப்பட்ட இந்த எச்சரிக்கை இன்னமும் நடப்பில் உள்ள நிலையில், வெள்ளப் பெருக்கு பல வீதிகளில் போக்குவரத்து பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
ரொரன்ரோவில் 40 மில்லிமீடடர் பொழியும் என்று கூறப்பட்ட நிலையில், ஏற்கனவே பெய்த மழை காரணமாக ரொரன்ரோ முழுவதிலும் உள்ள வீதிகள், நிலக்கீழ் போக்குவரத்து பாதைகள் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தின் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளன.
இன்று பிற்பகல் வேளையிலேயே யூனியன் தொடரூந்து நிலையத்தில் வெள்ளப் பெருக்கு எற்பட்டுவிட்ட நிலையில், அதனைக் காட்டும் நிழற்படங்களும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக பகிரப்பட்டு வருவதுடன், அங்குள்ள பாதைகள் வெள்ளத்தினால் மூடப்பட்டுள்ளதாக Metrolinx இன் பேச்சாளரும் தெரிவித்துள்ளார்.