பிரிட்டிஷ் கொலம்பியாவில் தீவிரமடைந்துள்ள காட்டுத்தீப் பரவலால் ஏற்பட்டுள்ள மிகவும் கடுமையான புகைமூட்டம் காரணமாக, அந்த பிராந்தியத்தின் வானூர்திப் பயணங்கள் பல நிறுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக பிரிட்டிஷ் கொலம்பியாவின் உள்ளக பகுதிகள் மற்றும் West Kootenay(கூட்ரெனி) பிராந்தியத்தில் உள்ள வானூர்தி நிலையங்களில், பல வானூர்திப் பயணங்கள் நிறுத்தப்பட்டுள்ளதுடன், மேலும் பல வானூர்திப் பயணங்கள் தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கெலோனா(Kelowna) அனைத்துலக வானூர்தி நிலையம், பென்டிக்டன்(Penticton) பிராந்திய வானூர்தி நிலையம் மற்றும் கூட்ரெனி(Kootenay) வானூர்தி நிலையம் ஆகியவற்றில் இன்று நண்பகலுடன் பல வானூர்தி பயணங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமது பிராந்திய காற்று மண்டலத்தில், ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தினையே பார்க்க முடிவதாகவும், அதனால் சிறிய ரக வானூர்திகள் பாதுகாப்பாக தரையிறங்க முடியாது நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கெலோனா(Kelowna) அனைத்துலக வானூர்தி நிலையத்தின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
உண்மை நிலைமையைக் கூறுவதென்றால், இதற்கு முன்னர் இவ்வளவு மோசமான புகைமூட்ட நிலைமையா தான் கண்டதில்லை எனவும், யன்னல் ஊடாக வெளியே பார்த்தால் பனிமூட்டம் சூழ்ந்துள்ளது போல அனைத்தும் மறைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் விபரித்துள்ளார்.
இதேவேளை பிரிட்டிஷ் கொலம்பியாவின் உள்ளக வட்டாரங்களுக்கான தமது சேவைகள் அனைத்தும் தொடர்ந்தும் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளதாக எயர் கனடாவும் இன்று அறிவித்துள்ளது.