முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16-ம் தேதி காலமானார். அவரது உடல் டெல்லியில் உள்ள ஸ்மிருதி ஸ்தல் பகுதியில் மறுநாள் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அவரது, அஸ்தி நாடு முழுவதும் உள்ள முக்கிய நதிகளில் கரைக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், வாஜ்பாயின் நினைவைப் போற்றும் வகையில் பாஜக ஆளும் மாநில அரசுகள் அவரை கவுரவித்து வருகின்றன. சத்தீஸ்கர் மாநிலத் தலைநகரான புதிய ராய்ப்பூரின் பெயரை ‘அடல் நகர்’ என்று பெயர் மாற்றம் செய்ய அம்மாநில மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், சத்தீஸ்கரில் உள்ள ராஜ்நந்த் கான் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் வாஜ்பாயின் பெயரைச் சூட்ட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
அதேபோல, வாஜ்பாய் பிறந்த குவாலியர் மற்றும் போபால் ஆகிய நகரங்களில், வாஜ்பாய்க்கு நினைவிடம் அமைக்க இருப்பதாக மத்தியப் பிரதேச அரசு அறிவித்திருக்கிறது. அவரது வாழ்க்கை வரலாறுகுறித்து பள்ளிப் பாடத்திட்டத்திலும் சேர்க்க இருப்பதாக மத்தியப்பிரதேச கல்வித் துறை அறிவித்திருக்கிறது.