படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், “எமது ஈழநாடு” நாளிதழின் முகாமையாளருமான மாமனிதர் சிவமகாராசாவின் 12 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை தெல்லிப்பழைப் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றிருந்தது.
பலநோக்குக் கூட்டுறவுச் சங்க வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிவமகாராசாவின் உருவச் சிலைக்கு, விருந்தினர்களாகக் கலந்து கொண்ட வடமாகாண சபை உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவாஜிலிங்கம், சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியின் ஓய்வுநிலை அதிபர் அருந்தவபாலன், வலி. வடக்குப் பிரதேச சபையின் தவிசாளர் டிசுகிர்தன் மற்றும் தெல்லிப்பழை பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவர் உமாகரன், சிவமகாராசாவின் சகோதரியான ஓய்வுநிலை ஆசிரிய ஆலோசகர் அன்னபரிமுழுமையானம் ஞானேஸ்வரன் உள்ளிட்டவர்கள் மலர் மாலை அணிவித்து உணர்வு பூர்வ அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து சங்க மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் மாமனிதர் சிவமகாராசாவின் நினைவாக நினைவு சுடர் ஏற்றலும், இரண்டு நிமிட அக வணக்கமும் இடம்பெற்றது.
தொடர்ந்து அன்னாரது சகோதரியான அன்னபரிமுழுமையானம் ஞானேஸ்வரனின் நினைவுப் பேருரை, விருந்தினர்களின் நினைவுரைகள் என்பன இடம்பெற்றன.
கடந்த 2006ஆம் ஆண்டின் ஒகஸ்ட் 20 ம் நாள் அன்று இரவு, தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலயத்திற்கு அருகிலுள்ள அவரது தற்காலிக வதிவிடத்தில், ஊரடங்கு அமுலிலிருந்த வேளையில் சிறிலங்கா இராணுவப்புலனாய்வு பிரிவினரால் சிவமகாராசா சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அன்னாரது இனப் பற்றுக்கும், விடுதலைப் பற்றுக்கும் மதிப்பளித்து, தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களால் சிவமகாராசாவிற்கு அதி உயர் விருதான “மாமனிதர் விருது” வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.